Friday, 7 June 2013

தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகால புரட்சித் தோழர்கள் நடத்திய தாக்குதல்கள்.


தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகர போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும் போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது.






ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.



1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.



1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.



1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி  தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.



1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும் தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.



1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள் புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.



1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ‘பாதுகாப்பு மாநாடு’ ஒன்றை கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்த போது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலக கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.



1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.



1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.



1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.



இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜே.ஆர் அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.



இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்ட விழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.



இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.



தமிழீழப் போர் 1(ஆவணி 1984 – ஆடி 1987)



ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன் மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.



தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன் தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீர விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.



இந்தியத் தலையீடு



இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல், இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.



1983 ஆவணியில், இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து ஆயுத எதிர்ப்பியக்கத்தைத் தீவிரமாக்கி, சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது. அதே நேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்து விட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து ‘தமிழீழ விடுதலை’யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவும் திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது. ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்து வந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயுத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.



மாசி 24, 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.



ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31, 1984 இல் இந்திரா காந்தி தன் மெய் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஜீவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார். தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஜீவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராக, சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழி நடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஜீவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.



தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.



திம்புப் பேச்சுவார்த்தை



ராஜீவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.



பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். “எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு”என்று.



ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.








No comments:

Post a Comment