எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.
இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.
ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்' போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.
சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.
உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.
போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.
ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.
அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.
மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.
தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.
துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது' என்று நான் பாலாவிடம் கேட்டேன்.
‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்' என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது.
நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.
தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.
பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.
பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.
பிரபாகரனுக்கு ‘ஓய்வு' கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்.
1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா.
1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன்.
No comments:
Post a Comment