Friday, 7 June 2013

களமுனையில் போராளிகளுடன் ஒரு சந்திப்பு.





இனப்பற்று... 



ஆனையிறவுச் சமரில் ஈடுபட்ட பெண் போராளிகளை , கலை பண்பாட்டுக் கழக தலைமையகத்தில் கலைஞர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.



சண்டை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கதைத்து முடித்தபின் – ஒரு நிலையில்...








ஒவ்வொரு போராளியாக அவர்களை இயக்கத்துடன் இணைய வேண்டும் என்ற என்ணத்தை விளைவித்த காரணிகளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.



சூரியா என்றொரு பெண் போராளி , தனது தலையையும் , கையையும் அடிக்கடி அசைத்தபடியே



” நான் திருகோணமலை குச்சவெளியைச் சேர்ந்தவள். சரி , இனி நான் இயக்கத்திற்கு ஏன் வந்தனான் எனச்சொல்லத் தேவையில்லை , உங்களுக்குத் தெரியும் தானே திருகோணமலையில் என்னென்ன நடந்தது ” என்று தனது இடத்தின் , இராணுவ அட்டூழியங்களை , இலகுவாக வெளிப்படுத்திவிட்டு இருந்தாள்.



அடுத்ததாக நாதினி என்று அராலியைச் சேர்ந்த பெண் போராளி எழுந்தாள். அராலி யாழ்மாவட்டத்திலுள்ள கிராமம்.



” நீர் என்ன மாதிரி , உமது ஊருக்கு இராணுவம் வந்ததாலா வெளிக்கிட்டீர் ” என்று நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் கேட்டார்.



” அராலிக்கு இராணுவம் வந்தாத்தான் இயக்கத்துக்கு வரவேணும் என்று இல்லை. இராணுவம் எங்க வெளிக்கிட்டாலும் அங்கும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள் ”



தனது இனத்தின் மீதான பற்றை எளிமையாக வெளிப்படுத்திவிட்டு நாதினி சிரித்துக்கொண்டே அமர்ந்தாள்.









தோழமை...



கலை பண்பாட்டுக் கழக தலைமைச் செயலகத்திற்கு கலைஞர்கள் சிலர் , ஆணையிரவில் சண்டையிட்ட போராளிகளை சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்காக வந்திருந்தார்கள்.



உரையாடல் நீண்ட நேரம் நடந்தது , குகன் என்று ஒரு போராளி தன் அபாயம் நிறைந்த அனுபவங்களை அழகாகச் சொல்லி முடித்தான். அவனிடம் ” இந்தப்போர் முனையில் உங்களால் மறக்க  முடியாத சம்பவம் எதையாவது சொல்ல முடியுமா ? ” என்று கலைஞர் தரப்பில் இருந்து ஒருவர் கேட்டார்.



அவன் சிறிது நேரமாக சிந்தித்தபின் சொன்னான் ” பெரிதாக ஒன்றும் இல்லை ஒன்றைச் சொல்லலாம். ”



” எனக்கு அருகில் – 5 அல்லது 6 யார் தள்ளி – அவ்ரோ போட்ட குண்டொன்று விழுந்தது – ஆனால் வெடிக்கவில்லை ” என்று விட்டு நிமிர்ந்தான்.



எல்லோரும் வியப்புடன் சிரித்தார்கள் , அப்போ கலைஞர் ஒருவர் ” அது வெடித்திருந்தா இன்று நீர் இதில் நிற்கமாட்டீர் ” என பலமான சிரிப்புடனே சொல்லி முடித்தார்.



” நான் சாகிற பிரச்சினை இல்லை , என்னோடு ஏழு – எட்டு பொடியள் நிண்டவங்கள் , அவர்களும் செத்திருப்பார்கள் ”



ஒரு விடுதலைப்புலி தனது உயிரை விட தன் தோழர்களை அளவு கடந்து நேசிப்பதை இலகுவாகச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்தான்.







பகிடி... 



ஆனையிறவு தடைமுகாமின் பின்பக்கமாக இருக்கும் காவல் நிலை ஒன்று – பரந்த வெட்டைக்கு நடுவே இருந்த அந்தக் காவல் நிலையில் , வெயிலுக்கும் – வெப்பத்திற்க்குக்கும் நடுவே போராளிகள் – தாக்குதலுக்கு தயாரான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குளிப்பதானால் 3 மைல்கள் பின்னால் வரவேண்டி இருந்தது. அதனால் 10 அல்லது 15 நாட்களாக ஒருவருமே குளிக்கவில்லை.ஒருநாள் கேசவன் என்ற ஒரு தோழன் பொறுப்பாளனிடம் சென்றான்.



” பத்துப்பதினைந்து நாளாகக் குளிக்கேலை , இன்றைக்காவது குளிக்க விடுங்கோ ” என்றான்.



” தம்பி , இந்த நேரத்தில குளிக்கவேனும் என்கிறாய் தற்செயலாக இராணுவத்தினர் வெளிக்கிட்டா என்ன செய்யிறது எங்கட திட்டங்களே தவிடு பொடியாகிவிடும் ” என்றான் பொறுப்பானவன். அவனிடமிருந்து கொஞ்ச நாளாக இந்தப்பதில் தான் வருகிறது , இன்றும் இதைத்தான் சொல்வான் என்பது எல்லோருக்கும் தெரியும்.



குளிக்கக்கேட்ட கேசவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டே சொன்னான்.



” இப்ப குளிக்கவிடாதீங்கோ பிறகு செத்தப்பிறகு உடல் மணத்தில மக்கள் அஞ்சலி செய்யவும் பக்கத்தில வராதுகள் ” என்றான்.  சுற்றி இருந்த தோழர்கள் சிரித்தார்கள். அவனது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தோழன் சொன்னான்.



” பரவாயில்லை மச்சான் நீ உப்பளப் பக்கமாகத்தானே இறங்குகிறாய் , செத்தாலும் பரவாயில்லை உப்புக்கை பழுதாகாமல் கிடப்பாய். எல்லாம் முடிந்த பிறகு நாங்களே உன்னை எடுத்து அடக்கம் செய்யிறம் “  என்று சிரித்துக்கொண்டே சொன்னான் குளிக்கக்கேட்க வந்த தோழனும் சிரித்துக் கொண்டே தனது வேலைகளைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தான்.



இப்படித்தான் கடினமான சூழலுக்குள்ளும் சிரிப்புடனும் – மகிழ்ட்சியுடனும் அவர்கள் எதிரியைச் சுற்றி நின்றார்கள் .




- விடுதலைப்புலிகள் இதழ் ( ஆவணி – புரட்டாசி : 1991 )




” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “