உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.
காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.
பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அன்னியரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக இலங்கைத்தீவிலே தமிழினத்தின் மீதான கொடூர இனவழிப்பு பெருகிவந்தது. சொல்லொணாத் துன்பதுயரங்களைச் சுமந்துகொண்டு வாய்மூடி அழுதுகொண்டிருந்தது தமிழினம். வன்முறைவழியற்ற போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டும் இனப்படுகொலைகள் பல்கிப்பெருகிக் கொண்டும் இருந்தன. கேட்க நாதியற்ற நிலையில் முனகிக்கொண்டிருந்த தமிழினத்திலிருந்து இளையதலைமுறையொன்று வீறோடு போராடப் புறப்பட்டது.
கோபாவேசத்தோடு திருப்பித் தாக்கத் தொடங்கிய இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்துத்தான் எமது தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.
வன்முறை வழியிலான போராட்டம் முனைப்புப் பெறத்தொடங்கியபோதே களத்திற் குதித்த பால்யவயதுப் பிரபாகரன், தூரநோக்கோடு நெறிப்படுத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்வதில் திட்டமிட்டுச் செயற்பட்டார். தனது செயற்பாடுகள் மூலம் மிகமிக இளம்வயதிலேயே மற்றவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். தொடக்க காலத்திலேயே அவரோடு போராட்டத்தில் இணைந்தவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களாயிருந்துங்கூட ‘தம்பி’ என்ற வாஞ்சையோடு அழைத்தபடி அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்டார்கள்.
அன்று பதின்மவயதிலேயே இயல்பாகத் தலைமைத்துவத்தை வெளிக்காட்டிய தலைவர், பின்னர் உலகமே வியக்கும் ஒப்பற்ற ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்த்து, போரியல் சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் புதைந்துபோன வீரத்தையும் பெருமையையும் உலகறியச் செய்தார். தமிழீழ விடுதலைப்போராட்டமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எதிர்கொண்ட சவால்கள் அபரிதமானவை. மீளவேமுடியாத பலபொறிகளில் சிக்கி மீண்டு வந்தது மட்டுமன்றி புதிய உத்வேகத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்தது இயக்கம். இவையனைத்தும் தலைவரின் நுட்பமான தலைமைத்துவத்தாலும் விடாப்பிடியான முயற்சியாலுமே சாத்தியமானது.
எத்தனை பெரிய இடரோ சவாலோ வந்தபோதும் துணிந்து எதிர்த்து நின்று சாதித்தவர் எமது தலைவர். எல்லாவற்றையும் பேசித்தீர்ப்போம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்து, அங்கு வீட்டுக்காவலில் வைத்து, தமது விருப்புக்கு ஏற்ப செயற்படும்படி தலைவர் வற்புறுத்தப்பட்டபோதுங்கூட அதற்கு அடிபணியாமல் தீர்க்கமாகவும் மூர்க்கமாகவும் எதிர்த்து நின்றார்.
தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படை யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ளாமல், பதவி ஆசைகளைக் காட்டி, போராட்டத்தின் அடித்தளத்தையே சிதைக்க முற்பட்டபோதெல்லாம், எவ்வித சஞ்சலமுமின்றி அவற்றைப் புறந்தள்ளிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியோ ஆசைகளைக்காட்டியோ வழிக்குக் கொண்டுவர முடியாத தனிப்பெருந்தலைவனைப் பெற்ற எமது இனம் பெருமைக்குரியதே.
செயலென்று இறங்கிவிட்டால் அதில் வெற்றிவெற எவ்வழியிலும் மூர்க்கமாக முயல்வது தலைவர் பிரபாகரன் அவர்களின் இயல்பு. ஈழப்போராட்ட வரலாற்றில் உலகமே வியக்கும் எத்தனையோ சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் தலைவரின் இந்த விடாமுயற்சியே உள்ளது.
பொறுப்பாளர்களுடன் நடந்த சந்திப்பொன்றில் ‘முடியாதென்று முடங்கிவிடாமல் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். வானில் வைத்து மிகையொலி(கிபிர்) விமானங்களை வீழ்த்த முடியவில்லையென்றால் அவை தரையிறங்கும் இடத்தைத் தேடிச்சென்றாவது அவற்றை அழிக்க முயலவேண்டும்’ என அறிவுறுத்தினார் தலைவர். தொடர்ந்த சில மாதங்களுள் கட்டுநாயக்கா விமானத்தளத்தில் பல மிகையொலி விமானங்கள் அழிக்கப்பட்ட சாதனை நிகழ்ந்தேறியது.
எமது தேசியத்தலைவர் தூய்மையான போர்வீரனாகவே வாழ்ந்தார். ஒரு போர்வீரன் கைக்கொள்ள வேண்டிய பண்புகளில் எதிரியை மதிப்பதும் மிகமுக்கிமானது. களத்தில் வீழ்ந்த எதிரிப்படை வீரர்களின் உடல்களை உரிய மரியாதையோடு எதிர்த்தரப்பிடம் ஒப்படைக்க முயல்வதும், அவற்றை ஏற்கமறுக்கும் பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையோடு அவற்றைத் தகனம் செய்வதும் எமது போராட்டத்தில் தலைவர் கட்டிக்காத்த மரபு. ஆனால் எதிரிகள் எமது போராளிகளின் உடல்களை எவ்வளவுதூரம் சீரழித்தார்கள், துயிலுமில்லங்களைத் துவம்சம் செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும். இருந்தும்கூட எதிரியை மதிக்கும் பண்பையும் மரபையும் எமது தலைவர் இறுதிவரை பேணியே வந்தார்.
மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு, தீவிரமான போரை நடத்திக்கொண்டிருந்துங்கூட எமது தலைவர் மிக மிருதுவான, அன்பான மனிதராகவே திகழ்ந்தார். சில சமயங்களில் அவர் தனது பாதுகாப்பைக்கூடக் கவனத்திலெடுக்காமலே செயற்பட்டார். அவரின் இப்பக்கத்தை விளக்க ஏராளம் நிகழ்வுகள் வரலாற்றிலுண்டு என்றாலுங்கூட இங்கே ஒரு சிறுதுளி விவரிக்கப்படுகிறது.
ஒருமுறை போராளிகளுடனான சந்திப்பொன்றுக்காக வாகனத்தில் விரைந்து சென்றுகொண்டிருந்த தலைவர் உடையார்கட்டுப் பகுதியில் வீதிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தாயையும் வாகன வசதிகளற்ற நிலையில் அங்கலாய்த்துக் கொண்டிருந்த அவரது உறவினரையும் கண்டுவிடுகிறார். உடனடியாகவே தனது வாகனத்தை நிறுத்தி, தனது மெய்க்காப்பாளர் மூலம் என்ன ஏதென்று விசாரித்தறிந்துவிட்டு தான் இறங்கிநின்றுகொண்டு உடனடியாகவே தனது வாகனத்தில் அத்தாயை மருத்துவமனை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். இதற்குள் தலைவரின் பாதுகாப்பணியின் பொறுப்பாளர் இன்னொரு வாகனத்தை வரவழைத்து அத்தாயை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாட்டைச் செய்தார். அத்தாய் மருத்துவமனையிற் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியபின்னரே போராளிகளுடனான சந்திப்பைத் தொடங்கினார்.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இனத்தின் பெருமையையும் வீரத்தையும் மரபையும் பேணுவதில் அதிகளவு அக்கறை செலுத்தினார். இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதிலும், தமிழரின் வீரமரபைத் தொடர்வதிலும், வீர உணர்வைத் தமிழரிடம் தக்கவைத்திருக்க வேண்டுமென்பதிலும் அதுதான் எமது இனத்திற்கான விடிவைப் பெற்றுத்தரும் என்பதிலும் அசையா உறுதியோடு இருந்தார்.
அதனாற்றான் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயரிய கட்டுக்கோப்புக்களையும், எதிரியிடத்தில் உயிருடன் பிடிபடாமை, போராளிகளின் வித்துடல்கள் எதிரியிடம் சிக்கவிடாமை, ஆயுதங்களைக் கைவிடாமை போன்ற மரபுகளையும் இறுக்கமாகப் பேணிவந்தார். இந்த மரபுகளும் கட்டுக்கோப்பும்தான் உலகிலேயே தனித்துவமான விடுதலை இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பை மிளிர வைத்தன; வெற்றிகளை ஈட்டித்தந்தன; உறுதிகுலையாமல் இயக்கத்தை வளர்த்தன.
தமிழ்வீரத்திற்கு இலக்கணம் வகுப்பது போல, தான் மட்டுமன்றி தனது பிள்ளைகளான சார்ல்ஸ் அன்ரனியும் துவாரகாவும் நேரடியாகவே போராளிகளோடு போராளிகளாக களத்தில் நின்று எதிரியுடன் சமராடியதும் வரலாற்றின் புதிய பக்கங்களே.
2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னேறி வன்னியை சுற்றிவளைக்கும் இராணுவத்தினரின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து, பாரிய அளவில் விடுதலைப்புலிகள் சேனை யாழ்குடாநாடு நோக்கி படைநடவடிக்கை எடுத்தது. அதற்குப் பலம் சேர்க்கும் நோக்கில் கடற்புலிகளின் 65 சண்டைப்படகுகள் அடங்கிய 13 படகுத்தொகுதிகள் காங்கேசன்துறை நோக்கிச்சென்றன. ஆனால் எதிரியோ முன்னாயத்தமாக இன்னொரு திட்டத்தைத் தீட்டி கடற்புலிகளின் அனைத்துப்படகுகளையும் சக்கரவியூகத்தில் சுற்றிவளைத்துவிட்டான்.
சாதாரணமான சுற்றிவளைப்புக்கள் கடற்புலிகளுக்கு சிறுபிள்ளை விளையாட்டுப் போன்றது. உடைத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்தச்சுற்றிவளைப்பை உடைப்பது கடினம் என்பது கடற்புலிகளின் தளபதிக்குத் தெரிகின்றது. கடற்கரும்புலிகள் முன்னேசென்று உடைத்துபாதை அமைத்து வெளியேறுவதற்கு களத்தளபதி கடற்புலிகளின் சிறப்புத்தளபதியிடம் அனுமதி கேட்கின்றார். அவ்வாறு உடைத்துவெளியேறுவதும் ஆபத்தானது என்பது தெரிந்த சிறப்புத்தளபதிக்கோ என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம். படைநடவடிக்கையை ஒருங்கிணைத்த பொட்டம்மானோ அத்தனை போராளிகளின் ஆபத்தான நிலைமை தெரிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துகின்றார்.
நேரடியாகவே கட்டளைநிலையத்திற்கு வருகைதந்த தலைவர் ராடார் திரை ஊடாக களநிலையை அவதானிக்கின்றார். பொறியில் சிக்கிய அணியொன்றை மீட்பதற்கு உடனடியாகவே ஒவ்வொரு படகையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கோட்டு வியூகத்துக்கு வருமாறு கட்டளையிடும்படி பணித்தார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வியூகம். புதிய வியூகத்திற்கு மாறிய கடற்புலிகளின் நகர்வைக் கண்டு சிறிலங்காக் கடற்படை திடீரெனப் பின்வாங்கி வழிவிடும் முடிவை எடுத்தது. சிறுசண்டையுமின்றி அனைத்துப் படகுகளும் பாதுகாப்பாக எதிரியின் சுற்றிவளைப்புக்குள்ளிருந்து வெளியேறின.
மாறிய களநிலைமையைக் கண்டு அனைவருக்குமே அதிர்ச்சி. சிறப்புத்தளபதி சூசை அவர்களும், படைநடவடிக்கை ஒருங்கிணைப்புத் தளபதி பொட்டம்மான அவர்களும் ”தலைவர் எண்டா தலைவர் தான்ரா” என தமது போராளிகளுக்குப் பெருமையுடன் கூறினார்கள். இதுதான் எமது தலைவனின் போர்க்கலை.
தமிழரின் வீரமரபைப் பேணுவதன் ஓர் அடையாளமாகத்தான் மாவீரர்நாளை மிகுந்த எழுச்சிகரமான நிகழ்வாக ஒவ்வோராண்டும் நினைவுகொள்ளும் நடைமுறையைத் தலைவர் கொண்டுவந்தார். ஆண்டுக்கு ஒரேயொரு முறை இயக்கத்தின் கொள்கை விளக்கத்தை வெளியிடும் நாளாக அந்நாளைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தார். எமது பண்டைய வீரவரலாறு தான் இன்று எமது இனவிடுதலைப் போராட்டத்துக்கான உந்துசக்தியென்பதையும், இந்த மரபுத்தொடர்ச்சி இருக்கும்வரைதான் எமது இனம் பெருமையோடும் இறைமையோடும் வாழமுடியுமென்பதையும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். பண்டாரவன்னியனின் போராட்டக் குணமும் வீரவரலாறுமே தனக்கான முன்னுதாரணமென்பதையும் எமது வரலாறு இனிவருந் தலைமுறைகளின் முன்னுதாரணமாக அமையவேண்டுமென்பதையும் தீர்க்கமாகச் சொல்லுவார்.
1999 இன் முற்பகுதியில் துருக்கியை எதிர்த்துப் போராடிய குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் ஒசாலான் (Öcalan) வேற்று நாடொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். குர்திஸ் விடுதலை இயக்கத்துக்கும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் மானசீகமான உறவு நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. தலைவர் பிரபாகரனுக்கும் அவ்விடுதலைப் போராட்டத்தின்பாலும் அவ்வியக்கத்தின்பாலும் தீவிர அக்கறை இருந்துவந்தது. ஒசாலான் நீண்டகாலமாகவே வெளிநாடுகளில் தங்கியிருந்தபடியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் தங்கியிருப்பதற்கான அனுமதியை எல்லா நாடுகளும் தவிர்த்த நிலையில் வேண்டப்படாத விருந்தாளியாய் ஒவ்வொரு நாடாகப் பந்தாடப்பட்டு இறுதியில் நைரோபி விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டார்.
அச்சம்பவத்தைச் செய்தியில் கேள்விப்பட்ட தேசியத் தலைவர் (வெரித்தாஸ், பிபிசி - தமிழோசை, ஐபிசி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை அவர் ஒருநாட்கூட தவறவிட்டதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் கேட்கமுடியாமற் போனால் ஒலிப்பதிவு செய்து நேரம்கிடைக்கும்போது கேட்பது தலைவரின் வழக்கம்) எரிச்சலும் கோபமும் கொள்கிறார். மிகுந்த விசனத்தோடு ஒசாலான் மீது காட்டமான விமர்சனத்தை வைக்கிறார்.
‘வெற்றி தோல்வியை விட பெருமையையும் வீரமரபையும் காப்பாற்ற வேண்டும். அதுவே தலைவன் ஒருவனின் தலையாய கடமை.’ என்பதே தலைவரது ஆதங்கமாக இருந்தது. எமது தலைவரின் அந்த தீர்க்கமும் மூர்க்கமுமே எமதினத்தின் தனித்துவமாக விளங்குகிறது; விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருமையாகவும் திகழ்கின்றது.
தனியே சிறிலங்கா அரசு என்ற ஒற்றை அரசு மட்டுமல்ல, அலையலையாய்த் திரண்ட வல்லாதிக்கங்களின் ஒட்டுமொத்த பலத்திற்கும் எதிராகப் போராடியபோதும், தளராமல் உறுதியோடு போராட முடிவெடுத்த தலைவர் அவர்கள் ”விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், 'கூர்மையானதாக' விட்டுச்செல்லவேண்டும்.” என முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் சொன்னார். "ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” எனச் சொன்னார்.
இப்படி எத்தனையோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்தபோதும் திடமான முடிவு எடுத்துச் செயற்படும் தலைவனைப் பெற்ற எமது இனம், அவரின் வழிகாட்டலில் நிச்சயம் ஒருநாள் விடுதலைபெறும். உலக அரங்கில் தனது பெருமையை நிலைநாட்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.
(அவுஸ்திரேலியாவில் மாவீரர் நாளையொட்டி வெளியிடப்பட்ட காந்தள் 2011 என்ற மாவீரர் நாள் வணக்கமலரில் வெளியானது)
No comments:
Post a Comment