வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது?
வெள்ளைத் தாளில், அர்த்தமேயில்லாது கறுப்பு மை படர வரும் கட்டுரைதானா இது? நம் உணர்வு எடுத்து நம் உயிரினால் எழுத வேண்டிய ஒன்றல்லவா இது! தமிழ் மானம் என்னும் எழுதுகோல் எடுத்து, உண்மை, நேர்மை, கடமை என்னும் ‘மை’களில் தோய்த்து எழுதப்படவேண்டிய வரலாறு அல்லவா இது!
தன்னிலையில் தாழாமை தாழ்வுற்றால் உயிர் வாழாமை என்றும் ‘மை’ கொண்டு, உணர்வு செறிந்த உயிர் என்னும் எழுதுகோல் எடுத்து இதனை எழுதத் தொடங்குகின்றேன். அரைநூற்றாண்டு ஆயிற்றா?அட, முருகா, முத்தமிழ்க் குமரா! ஐம்பது ஆண்டுகள் போயிற்றா?அல்லவே! அதனை நான் நம்பேன். இப்பொழுது போல் இருக்கின்றது எல்லாம்.
இதோ இப்பொழுது தான்.1974ஆம் ஆண்டு. தைத்திங்கள். தமிழர் தலைநகர் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு. தமிழர் வெள்ளம் கண்டு, தமிழர் வேகம் கண்டு சிங்கள அரசு சினந்தது. சீறிப்பாய்ந்தது. ஒன்பது தமிழர்களைக் கொன்றது. ஒரு நூறு தமிழரைக் காயப்படுத்தியது. அது கண்டு பல் கடித்தாயே! மனம் வெடித்தாயே! நான் அறிய, உள்ளே கனன்ற, உன்னுள் கனன்ற தீப்பிழம்புகள் சீறிக்கிளம்பத் தொடங்கியது அந்த நாள்தான். சிறுத்தையென பீறிக்கொண்டோடியது அதே நாள்தான். அது முடிந்து முழுதாய் முப்பது வருடங்கள் ஓடிவிட்டனவா? அட, அது மகா ஆச்சரியம்! ஐம்பது ஆண்டுகளில், முதல் பதினைந்து ஆண்டுகள் உன் அம்மாவுடன் போயிருக்கும். அப்பாவுடன் கழிந்திருக்கும். அயலாருடனும் சென்றிருக்கும். ஆனால் மீதி -முழுதாய் முப்பத்தைந்து வருடங்கள் எப்படிப் போயிருக்கும் என்று நான் எப்படிச் சொல்ல? சொல்லும் தகுதி எனக்குண்டா? சூழ உள்ள தோழர்களுக்குத் தெரியும்.
சொல்லியிருப்பாய். துயர்பட்ட நாளை, வதைபட்ட வாழ்வை, சொல்லியிருப்பாய். துடித்தெழுந்ததை, தோளில் தூக்கிய வீரத்தை, வெடித்துக் கிளம்பியதை, வெற்றி சமைத்ததை சொல்லியிருப்பாய். கடல் கடந்ததை, காட்டினை ஆண்டதை, திடல் ஏறி, திரையெட்டும் அளந்ததை, விடலைப்பருவ வாழ்வு, வீணாய்ப்போனதை, வீரனாய் உடல் எடுத்து வந்ததை, ஓர்மம் கொண்டு போரிட்டதைச் சொல்லியிருப்பாய். உன் தோழர்களுக்குச் சொல்லியிருப்பாய். அதிகம் பேசமாட்டாயாமே! ஆழ்ந்து சிந்திப்பாய். ஆரும் ஏதும் கேட்டால் உன் புன்னகை பேசும். அது போதும் என்று விடுவாயாமே! புரிகின்றது. பேசிப்பேசியே அழிந்த வரலாறு அல்லவா நமது வரலாறு. எழுதி, எழுதியே கிழிந்த வாழ்வல்லவா நமது வாழ்வு! முன்னர் ஒருவர் இருந்தார்.
கப்பல் ஏறி, கடல் கடந்து இங்கிலாந்து சென்று தொண்டை ஈரம் வத்தும்வரை பேசினார். பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்..பின்னர் ஒருவர் வந்தார். சோல்பரிப் பிரபுமுன், தொடர்ந்து பத்து மணித்தியாலம் பேசிச் சாதனை புரிந்தார். பிறகும் ஒருவர் வந்தார். ஆள்வோர் எல்லோருடனும் ஒப்பந்தம் எழுதினார். ஒப்பந்தம் ஒப்பந்தமாய் எழுதினார். ஒன்றும் சொல்லவில்லை. கிழிபட்டது. அதன் பிறகும் இன்னொருவர் வந்தார். அடுக்கு மொழியில் அழகு தமிழில் அழுத்தம் திருத்தமாய் பேசினார். ‘துப்பாக்கிக் குண்டு – விளையாட்டுப் பந்து, ‘தூக்குமேடை – பஞ்சுமெத்தை’ கர்ச்சித்தார். இரத்தப் பொட்டிட்டோம் நாம். என்ன செய்தார் அவர்? சோரம் போனார்! என்ன செய்தோம் நாம்? யாது செய்வர் தமிழ் மக்கள்? பஞ்சு மெத்தையைத்தான் கொடுக்க முடியவில்லை.
‘இந்தா பிடி’ என்று விளையாட்டுப் பந்தைக் கொடுத்து வீட்டை அனுப்பினர். பேசியும், எழுதியும், யோசித்தும், யாசித்தும் எங்கள் வரலாறு எழுதப்பட்டது. எங்கள் வாழ்வு கருக்கப்பட்டது. பேசவில்லை நீ! எழுதவில்லை நீ! யாசிக்கவில்லை நீ!‘இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி’இது ஒன்றையே நீ இயம்பினாய். இதற்கும் அப்பால் செயல் ஒன்றையே நீ நம்பினாய். செய்தாய். செயற்கரிய செய்தாய். ஈரம் படர்ந்த நமது நாளில், வீரம் விளைந்த வாழ்வை எமதாக்கினாய். இன்னும் செய்தாய். நமது தேசத்தில், நமது மண்ணில் நமது வரலாற்றை நீ திருத்தி எழுதவில்லை! திருப்பி எழுதினாய். மாற்றி எழுதினாய். மகத்தான எழுத்து அது! மகத்தான வாழ்வு அது. வரலாற்றின் பக்கங்களில் பலர் வருகின்றார்கள். போகின்றார்கள். வரலாற்றின் பக்கங்களில் பலர் எழுதப்படுகிறார்கள்.
ஆனால் வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் ஒரு சிலர். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போட்டவர்கள் ஒரு சிலர். லெனின், மாவோ சேதுங், ஹொசிமின், சேகுவேரா என்று அவர் பெயர்கள். அந்த ஒரு சிலரில் ஒருவனாய், உயர்ந்தவனாய், உன்னத தலைவனாய் நீ ஆனாய். எங்கள் நெஞ்சில் நிறைந்து போனாய். அனுபவமே ஆசானாய், ஆற்றலே வழிகாட்டியாய், உன் வாழ்வை அமைத்தாய். அதனூடு தமிழர் வாழ்வை செதுக்கினாய். செப்பனிட்டாய். என்னிடம் சில கேள்விகள் உள்ளன. கேட்கவா?
தமிழர் நாம் தலையுயர்த்தி நிமிர்ந்தது யாரினால்? நெஞ்சு நிமிர்த்தி எழுந்தது எவரினால்? இப்பொழுதெல்லாம் நம் கால்கள் நேராய் நடக்கின்றன. கோணல் நடை இல்லை. கூனல் முதுகு இல்லை. நெஞ்சு நிமிர்த்தி நாம் நேராய் நடந்தோம்! கண்கள் ஒளிர, நடையில் வேகம் வந்ததுவே! கைகள் வீசி, இந்த காற்று நமது, இந்த வயல் நமது, இந்த வானம் நமது, இந்த வாழ்வு நமது என்ற உயிர்ப்புடன் ஓர் அடி எடுத்து வைத்தோமே! இவையெல்லாம் யாரினால்? இந்தக் கால் நேராய் நடந்தது எவரினால்? நாம் தமிழர் என்று சொல்லிப் பெருமைப்பட எவர் காரணம்? பாருங்கள். நான் பொய்யுரைக்கின்றேனா? இப்பொழுது தமிழரின் தலைகள் குனிவதில்லையே நேரே பார்த்து பீடு நடை போடுகின்றனவே! இதற்கெல்லாம் காரணம் யார்? புளுகு அவிழ்த்து விடுகின்றேன் என்றா சொல்கின்றீர்கள்? இப்பொழுது பாருங்கள். தமிழர்களைப் பாருங்கள். அவர்கள் தலை நிமிர்த்தி நடப்பதைப் பாருங்கள்.
நாம் தமிழர்களைத்தான் சொல்கின்றேன். தறுதலைகளை அல்ல. போலிகளை, பொய்யர்களை, போக்கிரிகளை அல்ல. தமிழர்களைத்தான் சொல்கின்றேன் தமிழர் நாம் தலை நிமிர்த்தி நடக்க எவர் காரணம்? ‘மறவர் படைதான் தமிழ்ப்படை – குலமானம் ஒன்றுதான் அடிப்படை’என்று சொல்ல வைத்தவர் யார்? ‘வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்வெல்வர் என்பது வெளிப்படை’என்று உணர வைத்தவர் எவர்? நம்மால் இயன்றதை நாம் செய்வோம் என்னும் நம்பிக்கை தந்தவர் யார்? இயன்றது, இமயம் அளவு உயர்ந்தது என்னும் ஓர்மத்தை தந்தவர் எவர்? எம்பலம் எத்தகையது என்று எவரினால் நாம் அறிந்தோம். யானை தன் பலம் அறியாதாம். சிறிய நூல் கொண்டு கட்டினும் தன்னை அடக்கிக் கொள்ளும் யானை மிரண்டால், திமிறி எழுந்தால், காடே கொள்ளாதாம்.
இந்த விதமாய் நாம் எழுந்தோமே! யாரினால் இது சாத்தியமாயிற்று? நம்முள்ளிருந்து முகிழ்ந்த ஒருவரா நமக்கு இத்தனை வல்லபம் தந்தவர்? நமது மண்ணிலா இந்த உன்னதம் விளைந்தது? நமது மண்ணா இந்த மகத்துவம் படைத்தது? நமது கடலில் விளைந்த உப்பா நமக்கு இத்தனை ரோசம் தந்தது? நமது மரத்தில் கனிந்த பழமா இத்தனை இனிமை தந்தது? ஆச்சரியம் ஆச்சரியமாக எத்தனை கேள்விகள்! அட, என்று வியந்துபோக எத்தனை கேள்விகள்! நமக்கு மானம் இருக்கின்றதா? நமக்கு ரோசம் இருக்கின்றதா?நமக்கு உணர்வு இருக்கின்றதா? நமக்கு உரிமை வேண்டுமா? மானம், ரோசம், உணர்வு, உரிமை என்றால் என்னவென்று எமக்குக் காட்டியவர் யார்? மானத்துடன், ரோசத்துடன் உணர்வுடன் எப்படி வாழ்வது என்று எங்களுக்கு உரைத்தவர் யார்? உறுதி என்றால் எப்படி? வலிமை என்றால் என்ன? வீரம் என்றால் எத்தகையது? இறுதிவரை போராடுவது எங்ஙனம்?
இலட்சியம் ஈடேறும்வரை நின்று பிடிப்பது எப்படி? எதற்கும் விட்டுக் கொடுக்கா வீரம் கொள்கையிலிருந்து விலகிப் போகா ஓர்மம் இவற்றையெல்லாம் எமக்கு உணர்த்தியவர் யார்? உரமுடனும், ஓர்மத்துடனும், உத்வேகத்துடனும் போரை முன்னெடுப்பது எவ்வாறு என்று எமக்குச் சொல்லித் தந்தவர் யார்?ஒரு முறை நரம்புகளைச் சுண்டிப் பாருங்கள். நரம்புகள் அதிரும். மானம், ரோசம், உணர்வு இருக்கின்றன என்று சொல்லி அவை அதிரும். இந்த அதிரும் நரம்புகளை எங்களுக்குள் ஆக்கியவர் யார்? கொட்டும் வெற்றி முரசை எங்களுக்குள் தட்டியவர் யார்? திக்கெட்டும் பட்டொளி வீசிப்பறக்கும் தமிழர் கொடியை உலகத் தமிழர் நெஞ்சில் ஏற்றியவர் யார்? கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டி, நெஞ்சில் கடும் நஞ்சைச் சுமந்து, களத்தில், சுடுகலன் கொண்டு, எதிரியின் உயிரைக் சூறையாடி, இத்தனை வெற்றி சமைத்தாரே! யாரை நம்பி அவர் போரினுள் புகுந்தார்? தலைவன் நாமம் உச்சரித்தல்லவா அவர் தலை சரிந்தார்? வீரன் பெயர் சொல்லி அல்லவா விதையாய் வீழ்ந்தார்?
உயிரை ஆயுதமாய் எடுத்து விடுதலைப் போருக்கு தன்னைக் கொடையாய்க் கொடுக்க, ஒரு படை இருக்கின்றதே! காற்றுக் கூடப் புக முடியா இடங்களில் இவர் புகுவாரே! சாவைத் தெரிந்து வைத்து போரை எதிர்கொண்ட சந்ததிகள் இவர்கள். இந்தத்துணிவு எங்கிருந்து வந்தது? எப்படி இவர்களிடை அது விதைபட்டது. தலைவனை நம்பி அல்லவா தம்மைக் கொடுத்தனர். அண்ணனை நம்பி அல்லவா அகிலம் வென்றனர்? பெண்ணியம் என்று உலகெலாம் பேசுகின்றதே! பேசிக்கொண்டிருப்போர் பலர்! செயலாற்றிக்கொண்டிருப்போர் யார்? ஆணுக்குப் பெண் சரி நிகர் சமமாக வாழ வழிகாட்டியவர் யார்? யார் அவர்? ‘நாமிருக்கும் நாடு நமது’ என்று நமக்கு அறிவித்தவர்.
அது நமக்கே உரிமையாம் என்றும் தெரிவித்தவர். புறநானூற்றுக்கு புதிய அத்தியாயம் வரைந்தவர். போர் வரலாற்றுக்கு புதிய பக்கம் திறந்தவர். மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழன் வழிகாட்டியாக வாழ்பவர். எங்கள் விழியாகி வீரம் விளைநிலமாகி நிற்பவர். சொல்லிற்கும் அப்பாற்பட்டவர். சோதிப் பிழம்பானவர். இதோ வீழ்ந்தார் தமிழர். இனி எழார் என்று எதிரி எக்காளத் தொனியுடன் கூவ ‘இதோ எழுந்தார் தமிழர். இனி வீழார்’ என்று சங்கநாதம் முழங்கிய தமிழின் தலைமகன் இவர். தம்மைக் கொடையாய்க் கொடுத்தவரின் தலைவன். தம்மை விறகாய் எரித்தவரின் வீரன். வீரா, எம் தேசத் தலைவா, முத்தமிழ் குமரா, நீ வாழ்க, நின் படை வாழ்க. கொடி வாழ்க. குலம் வாழ்க. இனம் வாழ்க. நலமும் பல்லாண்டு வாழ்க. அண்ணா, நீ வாழ்ந்தால் நாங்கள் வாழ்வோம். தலைவா, தாங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும்.
No comments:
Post a Comment