இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? அடுத்த கட்ட தமிழர்களின் நகர்வு என்ன?என்பதுதான் இப்போது உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
ஆனால் இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை காண முன்னால் இந்தியாவாலும் அமெரிக்காவாலும் அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்களுக்கு விடுதலை புலிகளின் மேலான தடை சட்டம் என்பதினை நாம் மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.
எமது விடுதலை போராட்டமானது உலக வல்லரசுகளால் ஒடுக்கப்பட்டு விடுதலை புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தி அடைந்து விட்டதாக அரசாங்கமும் எல்லா உலக நாடுகளும் அறிக்கை விட்டு கொண்டு இருக்கும் போது இன்னமும் விடுதலை புலிகளின் நிதி கட்டமைப்பு செயற்படுவதாக சொல்லி மீண்டும் பயங்கரவாத சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இந்தியா.அதை தொடர்ந்து அமெரிக்கா. இனி வரும் காலங்களில்,தேவை ஏற்படின் ஏனைய நாடுகளும் இதை வழிமொழியலாம். இல்லை ஏற்கனவே சில நாடுகளில் இன்னமும் அமுல்படுத்தப்பட்ட சட்டம் காலாவதியாகாமல்
இருக்கலாம்.இவையெல்லாம் ஆதிக்க சிந்தனை உள்ள பேரினவாத நாடுகளின் அடிப்படை கொள்கைகள் . இவற்றை பற்றி நாம் விமர்சிப்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் எழுதலாம்.ஆகவே இதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழர்களாகிய நாம் விடுதலை போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்?
எமது நாட்டின் மீதான அக்கறையில் இன்னமும் செயற்பட்டு கொண்டு உள்ளோமா? வெறும் எழுத்துகளில் மட்டும் எழுதும் நாம் அதை எத்தனை சதவீதம் நடைமுறை படுத்துகின்றோம்?
வெளிநாடு தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 2008 இன் மாவீரர் உரையின் போது புலம்பெயர் இளம் தலைமுறையின் கையில் விடுதலை போராட்டமானது ஒப்படைக்கப்படுகின்றது என்று சொன்ன எங்கள் அண்ணாவின் சொல்லை நாம் எவ்வளவு தூரம் மதிக்கின்றோம். எனதருமை இளம் சமுதாயமே உங்கள் மனக்கதவை திறந்து கேளுங்கள்.
புலம்பெயர் இன்றைய தமிழர்கள் உண்மையான அர்பணிப்புடன் தம்மை ஈடுபடுத்தவில்லை என்பது நிதர்சனம். 2009 ஆண்டு வைகாசி மாதம் லண்டன் மாநகரமே அதிரும் படி ஒன்று கூடிய எம்மினிய உறவுகள் இன்று மாறியிருப்பது மிகவும் வேதனையான உண்மை. மகிந்த ராஜபக்ச குற்றவாளி என்றும் அவரது ஆட்சி குடும்பாட்சி என்றும் சொல்லிக்கொண்டு கொடி பிடிக்கும் எம்மினம் விடுமுறை வந்ததும் அந்த ஆட்சியாளர்களின் சுற்றுலா துறை வருமானத்தை அதிகரிக்க செல்லும் இடம் கொழும்பு அதுதவிர தமது பொழுது போக்கிற்காக விடுதலை போராட்டங்களில் பங்குபற்றுவது நடந்துகொண்டு தான் இருக்கின்றது.இன்னும் தென்னிந்திய திரைப்பட குழுவினரை அழைத்து மேடை விழா நிகழ்ச்சி நடத்துவதும் ஆளாளுக்கு பணம் சம்பாதிப்பதும் என்றும் இல்லாதவாறு அதிகரித்து உள்ளது. விடுதலை இயக்கமானது பலம் பொருந்தியதாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் நடை பெறுவது மிகவும் அரிதானதாக ஒன்றாகவே இருந்தது. அப்படி நடைபெற்றாலும் ஈழ தமிழரின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலைமை எதிர்மறையாக மாற்றம் அடைந்து உள்ளது.
இதற்கான முக்கிய காரணியாக எனது அறிவுக்கு தெரிவது, ஒரு சிறந்த தன்னலம் இல்லா தலைமைத்துவம் இல்லாதது தான்.இருந்திருந்தால் இந்தியா தடைவிதிக்கும் போதே ஜனநாய ரீதியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்.இல்லை எமது உறவுகளில் உள்ள ஒரு சிலரின் உண்மையான நாட்டுபற்றை தெரிந்து அவர்களுடன் கை கோத்து விடுதலையை மழுங்கடிக்காமல் வளர்த்து இருப்பார்கள். இப்போது உள்ள புலம் பெயர் தமிழர்களின் மனங்களில் விடுதலை வேட்கையானது மிகவும் குறைந்து விட்டது என்பது நிஜம்.
எங்கோ ஒரு மூலையில் எந்த ஒரு நிதிபலமும் இல்லாமல் கொரில்லா முறையில் ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் உச்சம் அடைந்து உலக நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது என்றால் அதற்கான முழுக் காரண கர்த்தாவாக இருந்தது எமது தன்னலம் இல்லா தலைமையையும் உண்மையான தேச வேட்கையும் தான்.
ஆனால் இப்போது இருக்கும் தலைமையோ, எப்போதோ எமது ஈழத்தை விட்டு வெளியேறி நிதி அடிப்படையில் பலம் பொருந்தியவர்களும், தாம் அழிந்து போகும் காலத்திலும் தமது பெயர் வரலாற்றில் எந்த ஒரு அர்பணிப்பும் செய்யாமல் இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தான்.
எனவே மதிப்புக்குரிய எம்மினிய தமிழ் உறவுகளே நீங்கள் இப்போதும் விழித்து எழுந்து விடாவிட்டால் எமது இனமானது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இழந்து ,தமது இனத்தின் அடையாளத்தை தொலைத்து, நாம் வாழ்ந்ததற்கான அறிகுறிகளையே இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.அத்துடன் நாற்பது ஆயிரத்திற்கு மேலான எமது போற்றுதற்குரிய மாவீரர் செல்வங்களின் கனவும் தியாகமும் வீணாகி போய்விடும். எமது ஈழத்தில் நடந்த அவலங்களிற்கு மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யபட்டதற்கும் உண்மையான தீர்வு கிடைக்கமால் போய்விடும்.
எமது தமிழ் மக்களே!
இறுதியாக எமது உன்னத தலைவன் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள். இப்போது உள்ள இந்திய, புலம் பெயர் தமிழ் தலைவர்கள் யாரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. உண்மையான சுதந்திர தாகம் கொண்டு எம்மையும் எமது இனத்தையும் காக்க போராடும் ஒரு சிறந்த தலைவன் எங்களுக்கு வேண்டும். அவன் இப்போது எங்கோ ஒரு மூலையில் மிக அடிமட்ட நிலையில் உண்மையான சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கலாம்.அவனை கண்டு பிடியுங்கள்.
அது கடினம் என்றால் இப்போது தலைமையில் இருக்கும் உறவுகளே நீங்களாவது இனிமேல் உங்கள் தன்னலங்களை விட்டு விட்டு ஒன்றாக கை கோருங்கள். அப்போதாவது நாங்கள் உங்களை நம்புகின்றோம்.
நன்றி
No comments:
Post a Comment